தற்கொலைக்குப் பின்னால் ஒரு செய்தி ஒளிந்திருக்கும். அந்தச் செய்தி கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்.
மன நிம்மதியின்மையின் வெளிப்பாடே தற்கொலை.
தாங்கொணா மன வலியின் வெளிப்பாடே தற்கொலை.
சாக விரும்புவதல்ல, தற்போதைய மன வலியிலிருந்து விடுபடும் நோக்கில் நிகழ்வதே தற்கொலை.
விரும்பாத ஒன்றை எதிர் கொள்ள முடியாமல் தப்பிக்கும் முடிவே தற்கொலை.
ஒரு இக்கட்டான சூழலிருந்து வெளியேற வழியே இல்லை எனக் கருதி புதிய வழியை உருவாக்கும் முயற்சியே தற்கொலை.
யார் மீதும் எனக்கு அன்பில்லை என்கிற பிரகடனமே தற்கொலை.
இனி எதிர்காலமே இல்லை என்கிற நம்பிக்கையே தற்கொலை.
ஒருவர் மீது நடத்தும் கொடூரமான தாக்குதலே தற்கொலை.
என் அன்புக்குரியவரால் நான் கொல்லப் படுகிறேன் என்கிற செய்தி தான் தற்கொலை.
எவ்வளவோ போராடியும் வெல்ல முடியாத ஒன்றை, இறுதியாக வென்று காட்டுவதே தற்கொலை.
‘இனி தாக்கு பார்க்கலாம்’ என்று அன்பிற்குரிய எதிரிக்குச் சவால் விடுவதே தற்கொலை.
‘என்னை வென்று விடு பார்க்கலாம்’ என்று யாரோ ஒருவருக்கு விடுக்கும் சவாலே தற்கொலை.
‘என் உயிரே போனாலும் உன் கொள்கையை நான் ஏற்க மாட்டேன்’ என்கிற அறைகூவலே தற்கொலை.
‘உன் கூண்டுக்குள் ஒருபோதும் நான் அடை பட மாட்டேன்’ என்று யாரோ ஒருவர் முன் ஏற்கின்ற சூளுரையே தற்கொலை.
‘உன் விருப்பப்படி என்னை இயக்க முடியாது’ என்று விடுக்கின்ற அறைகூவலே தற்கொலை.
‘உன் தாளத்துக்கு நான் நடனமாட மாட்டேன்’ என்கிற உறுதியான இறுதி மறுப்பே தற்கொலை.
‘இனியும் உன்னோடு நான் போராட விரும்பவில்லை. என்னை மன்னித்து விடு’ என்கிற அறிக்கையே தற்கொலை.
தன் விருப்பத்தை உறுதியாக வெளிப் படுத்தும் முயற்சி தான் தற்கொலை.
தற்கொலை என்பது ஒரு தண்டனை.
ஒருவருடைய பலவீனத்தையே அவருக்கு எதிராகப் பயன்படுத்தி அவரைத் தோற்கடித்த அன்புக்குரியவருக்கு அவர் தருகிற தண்டனை.
தற்கொலை என்பது பிரம்மாஸ்திரம்.
இயலாமையின் வெளிப்பாடல்ல தற்கொலை. போரின் இறுதி அஸ்திரமே தற்கொலை.
இரக்கமின்றித் துன்புறுத்திய நெருக்கமான நபர்களுக்கு கொடுக்கும் தண்டனையே தற்கொலை.
மிக மிக அன்புக்குரிய ஒருவர் கொடுத்த வலியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் எடுக்கும் முடிவே தற்கொலை.
அன்புக்கான கதறலே தற்கொலை.
உயிரினும் மேலாக அன்பு செலுத்தக் கூடிய நபரிடமிருந்து நமக்குரிய அன்பு கிடைக்கவில்லையே என்கிற குமுறலே தற்கொலை.
யாரோ ஒருவரால் அல்லது சிலரால் இரகசியமாகச் செய்யப் படும் கொலையே தற்கொலை.
தன்னைச் சார்ந்த அனைவரையும் ஒற்றைச் செயலில் குற்றவாளி ஆக்கும் தந்திரமே தற்கொலை.
தன்னை வாழ விடாமல் தடுத்த நபர்களை, அவர்கள் மரணம் வரை குற்றவுணர்வோடு மருக வைக்கும் கொடூர தாக்குதலே தற்கொலை.
என் விருப்பப்படி என் வாழ்க்கையை வாழ அனுமதிக்காத எவருடைய அடிமையாகவும் நான் உயிர் வாழ மாட்டேன் என்பதை ஆணித்தரமாகச் சொல்லும் செய்தியே தற்கொலை.
நம் உயிரினும் மேலாக நாம் அன்பு செலுத்தக்கூடிய ஒரு நபர் நமக்கு இழைக்கும் துரோகத்தைத் தடுக்க முயன்றும், முடியாத போது அவர் மீது நடத்தப் படுகிற இறுதித் தாக்குதல் தான் தற்கொலை.
மேற்கண்டவற்றுள் ஏதேனும் ஒரு செய்தி தான் தற்கொலை.
தற்கொலையைக் கோழைத்தனமான, முட்டாள்தனமான முடிவு என்று கருதுவது அறியாமை.
நொடிப் பொழுதில் உணர்ச்சி வயப் பட்டு எடுக்கப் படும் முடிவே தற்கொலை என்பதும் தவறு.
இயன்ற வரை போராடிப் பார்த்து விட்டு, இறுதியாக எடுக்கும் முடிவே தற்கொலை.
ஒவ்வொரு தற்கொலைப் பயணமும் மாதக் கணக்கில் நடந்த பிறகே தற்கொலையை அடைந்திருக்கிறது.
தன்னைக் கை விட்டு விட்டு, வேறொரு நபருடன் கூடிக் கும்மாளமிட்டுக் கொண்டிருக்கும் தன் இணையை அம்பலப்படுத்து வதற்காக, தன் காதலை ஏற்காத தன் பெற்றோரைப் பழியெடுப்பதற்காக, விரும்பியவரை அடைய முடியாமல் போய் விட்ட விரக்தி காரணமாக செய்யப் படுவதே பதின் பருவத் தற்கொலை.
“தங்கள் இருப்பால் கூடப் பாதிக்கப் படாத ஒருவரைத் தங்கள் இழப்பால் பாதிக்கச் செய்ய முடியும் என்று நம்பித் தங்கள் உயிரை விடும் செயல்” அதாவது, “உயிரோடு போராடியே திருத்த முடியாத நபரை தன் உயிரைக் கொடுத்துத் திருத்த முயலும் செயலே தற்கொலை”
இவ்வாறாகத் தற்கொலை செய்து கொண்டோரைப் பற்றி பலரும் பலவிதமாக வர்ணித்தாலும், “அன்புக்கான கதறலே தற்கொலை. தற்கொலை குறித்த மற்ற விவரணை அனைத்தும் உண்மையை மறைக்கும் சாக்குப் போக்குகளே” என்பதே இந்நூலின் கருத்து.
இந்த அத்தியாயம் 2k Kids காதல் அறிவியல் நூலில் இருந்து. பெண் பிள்ளைகளை பெற்ற தாய்மார்கள் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டிய தகவல்களின் களஞ்சியம் இந்த நூல்.