Description
ஒருமுறை என் குரு சொன்னார். உங்களிடம் தங்கச் சுரங்கத்தின் சாவியைக் கொடுத்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னால், நீங்கள் சாவியைத் தூக்கிக்கொண்டு ஓடிவிடுகிறீர்கள். ஏனென்றால் அது தங்கச் சாவி! எவ்வளவு அருமையான தங்கத்தால் செய்த செருப்படி எங்களுக்கு! எங்களுக்கு என்ன, உங்களுக்கும்தான்.
நாம் இப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நமது ஆற்றல்கள் என்னவென்று தெரியாமலே, நம்மைப் பற்றி நாமே மிகக்குறைவாக மதிப்பிட்டு, சின்னச் சின்ன விஷயங்களுக்காக நாய் மாதிரி அலைந்துகொண்டிருக்கிறோம், நமக்குள்ளேயே கேட்பதையெல்லாம் கொடுக்கும் ஒரு ‘ஜின்’னை வைத்துக் கொண்டு!
அதை எங்களுக்கு குரு உணர்த்தினார். நாங்கள் புரிந்துகொண்டோம். அதைத் தகுதி உள்ளவர்களுக்கும் சொல்ல எனக்கு ஆசை. அதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த வாய்ப்பை எனக்கு கல்கி கொடுத்தது. அதன் பொறுப்பாசிரியர் ஆர். வெங்கடேஷ் கொடுத்தார். நானும் பயன்படுத்திக்கொண்டேன். படிப்பவர்களும் பயன்பெறுவதற்காக. பதினெட்டு வாரங்களாக ‘மந்திரச்சாவி’யை எப்படி உபயோகிப்பது என்று எனக்குத் தெரிந்தவரை விளக்கிச் சொன்னேன்.
இப்போதுஅது அழகான நூலாக வருகிறது. இன்னும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் படித்துப் பயனடைவார்கள் என்பது என் மகிழ்ச்சியை மேலும் கூட்டுகிறது. நான் என் புத்தகங்களில் சொல்லி யிருப்பதைவிடச் சற்று வேறுபட்டு இந்தத் தொடரில் பேசியிருந்தேன். புத்தகங்களில் மேற்கோள்களும், கடந்த காலத்தில் வாழ்ந்த சாதனையாளர்களின் வாழ்வில் இருந்து நிகழ்வுகளும் உதாரணங்களாகச் சொல்லப்பட்டிருக்கும்.
ஆனால் இந்தத் தொடரில் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும், பல்வேறு துறைகளைச் சார்ந்த சாதனையாளர்களின் வாழ்விலிருந்தும் உதாரணங்கள் காட்டியுள்ளேன். திரும்பத் திரும்ப ஒரு ராக்ஃபெல்லர், ஒரு ஹென்ரி ஃபோர்டு,ஒரு புத்தர், ஒரு பரமஹம்சர் என்று சொல்லிக்கொண்டிருக்காமல். அப்படிச் சொல்வதில் தவறொன்றுமில்லைதான். ஆனால் தன்னுள்ளே மறைந்திருக்கும் ஆற்றல்களைப் புரிந்துகொண்டு, அதை வெளிக்கொண்டுவரும், அதாவது மந்திரச் சாவியைப் பயன்படுத்தும் வழிமுறைகள் கடந்த காலத்தோடு முடிந்து போய்விடவில்லை, அது ஒரு முடிவற்ற தொடர்ச்சியாகவே இருக்கிறது. நமக்கு வழிகாட்டக்கூடிய மனிதர்கள் எப்போதுமே இருந்துகொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை உணர்த்துவதாகவும் அந்தத் தொடர் அமைந்தது.
அழகான கல்கி வெளியீடாக இப்போது உங்கள் கைகளில். இதற்கும் நான் கல்கிக்கும், வெங்கடேஷ்க்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். கல்கியில் என் படைப்புகள் வெளியானது எனக்கு ஒரு கௌரவம் என்பதில் சந்தேகமில்லை. இப்போது கல்கியே அதை நூலாகக் கொண்டுவருவதில் எனக்கு இரட்டிப்பு சந்தோஷம்.
Reviews
There are no reviews yet.