நன்றியறிவிப்பு
நான் ஒரு பிறவி மேதை அல்ல. நான் பிறக்கும் போது, என்னுடைய அறிவு சார் சொத்து என் ஆழ் மனம் மட்டுமே. உலக அறிவைப் பொறுத்த வரை, ஒரு வெள்ளைக் காகிதமாகவே நான் பிறந்தேன். அதே போல, நிம்மதியான குடும்ப வாழ்க்கைக்குரிய மிகச் சரியான பாதையைத் தேடத் துவங்கிய போதும், ஒரு வெள்ளைக் காகிதமாகவே நான் பயணத்தைத் துவக்கினேன்.
ஏறக்குறைய பன்னிரண்டு ஆண்டு கால இடையறாத் தேடல் மிக்க பயணத்தின் போது நான் கற்றும் கண்டும் உணர்ந்த அறிவின் ஒரு பகுதியையே இந்நூல் வழியே நான் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
நூலின் கருத்தை உள்வாங்கி, அலசி ஆராய்வதற்குரிய விதிகளின் படி, ஏராளமான நூல்களை நான் அப்போது வாசித்திருக்கிறேன். அதனால் ஏராளமான தகவல்கள் என் ஆழ்மனதில் பதிவாகியுள்ளன. ஆனால், எந்த நூலின் வாயிலாக எந்த அறிவைக் கற்றுக் கொண்டேன், எந்தத் தாக்கத்தைப் பெற்றேன் என்பதை மட்டும், என்னால் நினைவு கூற முடிவதில்லை. ஆகவே, உலகில் இதுவரை தோன்றி மறைந்துள்ள, என் சம காலத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அனைத்து நூலாசிரியர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு நூலைத் துவக்குகிறேன்.
சட்டப்பூர்வ எச்சரிக்கை.
காதல் என்கிற பெயரில் சமூகத்தில் நிலவும் சீர்கேடுகளைக் களைய முயற்சிப்பதும், அதன் வாயிலாகக் குடும்ப அமைப்பைக் காக்க முயல்வதும் தான் இந்த நூலின் தலையாய நோக்கம். அவ்வாறான நோக்கம் நிறைவேற, தன்னால் இயன்ற அளவிற்கு நூல் நேர்மையாக உழைத்திருக்கிறது. ஆகவே, இந்த நூலை விழிப்புணர்வூட்டும் கல்வி நூலாகவே கருத வேண்டும். நூலில் ஆண்களைப் பற்றியும், பெண்களைப் பற்றியும், ஆழமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் எந்தத் தனி மனிதரையும் தாக்கும் நோக்கம் கொண்டவையல்ல.
இந்த நூலைக் காதல் காமம் மோகம் மற்றும் தற்கொலை ஆகிய உணர்வுகள் சார்ந்த உளவியல் கல்வியைப் போதிக்கும் நூலாகவே கருத வேண்டும். மேலும், நூலில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களைப் பின்பற்றியதால், தங்கள் வாழ்வில் ஏற்பட்டு விட்டதாகச் சொல்லப் படும் எந்தப் பிரச்சினைக்கும், பொருள் இழப்புக்கும், உடல் நல பாதிப்புக்கும், உறவு முறைச் சேதத்திற்கும், மன உளைச்சலுக்கும், இங்கே சொல்லப் படாத இன்னபிற அபாயங்களுக்கும் நூலின் ஆசிரியரோ அல்லது விற்பனையாளரோ, விளம்பரதாரரோ, எவ்விதப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்கிற கருத்து, மிகத் தெளிவாக, வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.