fbpx
Course Content
Tantra Secrets
About Lesson
முன்னுரை

 

தமிழ்நாடு என்கிற புனித பூமியின் பெருமைகளில் சிலவற்றைப் பற்றிய சிறிய அறிமுகத்தோடு, தன்னுடைய பயணத்தை நூல் துவக்குகிறது.

 

இவ்வாறு துவக்க வேண்டியது இந்நூலின் கடமை. ஏனெனில், பண்டைய தமிழர்களின் பெருமைகளில் முதன்மையாகத் திகழும் ஒரு ஞானத்தைத் தழுவியே இந்நூல் எழுதப் பட்டுள்ளது. அதற்கான நன்றி யறிவிப்பே இந்த முன்னுரை.

 

பண்டைய தமிழ் சித்தர்களின் பங்களிப்புகளில் கொள்ளையிட முடிந்தவை கொள்ளையடிக்கப் பட்டன. கொள்ளையடிக்க முடியாதவை அழிக்கப் பட்டன. அவ்வாறு அழிக்கப்பட்ட இலங்கை இந்தியப் பல்கலைக் கழகங்களின் மதிப்பு, நூலகங்களின் மதிப்பு, இந்துக் கோவில்களின் மதிப்பு, அங்கே சேமித்து வைத்திருந்த அறிவுத் தகவல்களின் மதிப்பு, பொக்கிசங்களின் மதிப்பு எனக் கணக்கிடத் தொடங்கினால், கணிதத்தில் புதிய எண்கள் பலவற்றைக் கண்டு பிடிக்க வேண்டியிருக்கும்.

 

அந்த அளவிற்கு அன்னியர்கள் அழித்து விட்டார்கள். எந்தப் படை யெடுப்பாலும் அழிக்கவே முடியாத, கொள்ளையடிக்கவே முடியாத தமிழர்களின் ஞானமனைத்தும் கொள்ளைக்காரர்களின் பிற்போக்குத்தனமான, முட்டாள் தனமான, கருத்துப் போர்களால் முடக்கப் பட்டன.

 

அவ்வாறு அழிக்கப் பட்டதில், முடக்கப் பட்டதில், மறைக்கப் பட்டதில் முதல் இடத்தில் இருப்பது அழிக்கவே முடியாத ஒரு பேருண்மை. அது உலகையே உருவாக்கிய உண்மை. உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் உண்மை. உலகம் உள்ள வரை உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கக் கூடிய உண்மை. உயிர்கள் அனத்திற்கும் பொதுவான உண்மை. உயிரினம் உள்ளளவும் மாறாமல் இருக்கக் கூடிய உண்மை.

 

மறுக்கப்பட்ட உண்மை. மிகக் கொடூரமாக எதிர்த்து வாதிடப்பட்ட உண்மை. கொலை பாதகச் சித்திரவதைகளுக்கு ஆளான உண்மை. ஆனால், எவராலும் கொல்ல முடியாத உண்மை. இப்போது அறிவியல் துணையுடன் கொஞ்சம் கொஞ்சமாகக் கசிந்து வெளியாகிக் கொண்டிருக்கிற உண்மை.

 

பேருண்மைகள் நீர்க் குமிழி போன்றவை. அவற்றை யாராலும் நிரந்தரமாக மறைத்து விட முடியாது. ஒதுக்கி விட முடியாது. எதிர்த்து நிற்க முடியாது. தொடர்ந்து எதிர் வாதாட முடியாது. அழித்து விட முடியாது என்பதைக் கூட உலகிற்கு உணர்த்தக் கூடிய உண்மை.

 

குட்டி போட்டு பாலூட்டி வளர்க்கும் விலங்கான மனிதனை அறிவியல் அறிஞனாய் உருமாற்றிய உண்மை. மானிடரின் மனதை என்றென்றும் ஆளப் போகின்ற உண்மை. அப்படிப்பட்ட ஒரு பேருண்மையை கண்டு பிடித்து உலகிற்குக் கொடையளித்த பெருமை தமிழ் ஞானிகளுக்கு உண்டு.

 

காமம் புனிதமானது. கலவி வழிபடத் தக்கது. அபரிமிதமான காம உணர்வு இருப்பது ஒரு வரம். உயிர் மட்டுமல்ல, மனிதப் பண்புகள் அனைத்துமே உருவாவதற்கும் காமமே காரணம். பண்புகள் உருவாக மட்டுமல்ல. ஒவ்வொரு கலை உருவாகவும் காமமே காரணம். கலை உருவாக மட்டுமல்ல, கருணையும் இரக்கமும் மனித மனதில் உருவாகவும் காமமே காரணம். காமம் இல்லாமல், மனித இனத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கின்ற எவ்வித உருவாக்கமும் சாத்தியம் இல்லை.

 

மனிதனின் மூளை முழு ஆற்றலுடன் செயல்பட்டிட, எல்லைகள் கடந்து கற்பனை விரிந்திட, விரிந்த கற்பனை வடிவம் பெற்றிட என மனித சாதனைகள் அனைத்திற்கும் மூலமாயிருப்பது காமமே என்கிற உண்மையை முதன் முதலாகக் கண்டறிந்து, அதை மனித சமூகத்திற்குக் கொடையளித்தவர்கள் தமிழர்கள்.

 

மேலும் இதை உணர்த்தவே தமிழ் ஞானிகள் கலவி நிலையை வழி படக்கூடிய வடிவமாக உருவகப்படுத்தினர். இது என்றென்றும் மாறாத உண்மை என்பதைப் புலப்படுத்தவே, உறுதிப் படுத்தவே சிற்பங்களாக இதை வடித்து வைத்தனர். அனைவர் கண்களுக்கும் இது தெளிவாகத் தெரிய வேண்டும். அத்தனை மனிதர்களும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே கோவில்களின் கோபுரங்களில் அதைப் பதித்து வைத்தனர்.

 

அது மட்டுமல்ல. ஆண் என்பவன் சக்தி மிக்கவன். ஆனால் இயல்பான நிலையில் அவனுடைய சக்தி அழிவு சக்தியாக, நாசகாரச் சக்தியாக, அழிக்கும் சக்தியாகவே இருக்கும். அவ்வாறு அழிவு சக்தியாக உள்ள ஆணின் சக்தியை உருவாக்கும் சக்தியாக திசை மாற்றுபவள் பெண்.

 

ஆகவே ஆணின் சக்தியானது தனது அழிக்கும் இயல்பை மறந்து, உருவாக்கப் பாதையை நோக்கித் திரும்பிட, அவ்வாறாக அதை உருமாற்றிட ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு பெண் தேவை. பெண் இல்லாவிட்டால், ஆணின் சக்தி அழிவு சக்தியாக, நாசகாரச் சக்தியாக அழிக்கும் சக்தியாகவே இருக்கும். இலட்சத்தில் ஒரு ஆண் விதிவிலக்கு.

 

இவ்வாறாக, ஆணின் சக்தியை உலகிற்கு பயன்படத்தக்க சக்தியாக மாற்றக்கூடிய மூல சக்தி பெண்ணே. ஆகவே பெண் வணங்கத் தக்கவள். தேவதையைப் போல பராமரிக்கத் தக்கவள். சிறந்த மனநிலைக்கு உரிமையுடையவளாகப் போற்றி வளர்க்கத் தக்கவள் என்பதை மனித சமூகத்திற்கு உணர்த்தியவர்கள் தமிழர்கள்.

 

எந்தக் குழந்தையும் பிறர் சொல்வதைக் கேட்பதன் மூலமாகத் தன் பண்பாற்றலை வளர்த்துக் கொள்வதில்லை. எதையெல்லாம் சிறு வயதில் பார்க்கிறதோ அதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய பண்பைப் பெறுகிறது. அவ்வாறு பெற்ற பண்புகளை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்கிறது.

 

குழந்தைகள் தாயைப் பார்த்தே வளரக் கூடியவை. தந்தை என்பவன் மந்திரங்களைக் கற்றுத் தரும் உவாத்தி மட்டுமே. மந்திரங்களைப் பயன் படுத்துவது குழந்தையின் மனோபாவத்தைப் பொறுத்தது. மனோபாவம் தாயிடமிருந்தே பெறப்படுவது. முதல் ஏழாண்டுகளில் ஒரு மனிதனின் மனோபாவம் உருவாகி விடுகிறது. குழந்தையின் முதல் ஏழாண்டுகள் தாயுடன் தான் மிக அதிகமாகக் கழிகின்றன.

 

அதாவது குழந்தையின் முதல் அறுபதாயிரம் மணி நேரத்தில், ஆறாயிரம் மணி நேரத்தைப் பள்ளியிலும், நான்காயிரம் மணி நேரத்தை மற்றவர்களிடமும் செலவளித்தது போக மீதமுள்ள ஐம்பதாயிரம் மணி நேரத்தையும் தன் தாயுடன் தான் குழந்தை செலவிடுகிறது. ஆகவே தன் தாயைப் பார்த்தே ஒவ்வொரு குழந்தையும் வளர்கிறது. அதனால், தாயின் செயல்கள் தான் குழந்தையின் எதிர்காலத்தை உருவாக்கும் காரணிகளாக இருக்கின்றன.

 

ஒரு பெண்ணால் மட்டுமே தலைமுறைகள் கடந்தும் நிற்கக் கூடிய பண்பாற்றலை உருவாக்க முடியும். ஆகவே, பெண்ணைப் பண்புடையவளாக, நல்ல மனநிலை கொண்டவளாக வளர்க்க வேண்டும்.

 

வெற்றி தோல்விகளின் மூலப் பொருள் மனநிலை. மனநிலையோடு ஒப்பிடும் போது அறிவென்பது குப்பைக்குச் சமம். மிகப் பெரிய அறிவாளிகளின் தோல்விக்கெல்லாம் அவர்கள் மனநிலையே மூலகாரணம்.

 

உலகளவு அறிவிருந்தாலும் மனநிலை சரியில்லையேல், அந்த அறிவு அழிக்கும் சக்தியாகி விடும். அல்லது பயன்படுத்தப் படாமலே வீணாகப் போய் விடும். மனநிலை தான் மனிதனின் மிகப் பெரிய சொத்து. வாழ்வில் சாதிக்க விரும்புபவர்கள், வெற்றி பெற விரும்புபவர்கள், மனநிலையைப் பாதுகாப்பாய் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அந்த மன நிலையை உருவாக்குபவள் பெண். ஆகவே பெண்ணின் மனநிலை பாதுக்காக்கப் பட வேண்டும்.

 

ஒவ்வொரு ஆணும் தன் மனைவியை ஒரு தேவதையைப் போல வைத்திருக்க வேண்டும். அவ்வாறு தேவதையைப்போல் தன் மனைவியை வைத்திருந்தால், கணவனுடைய வாழ்க்கையை மட்டுமல்ல, தன் சுற்றுப்புறம் முழுவதையும் அவள் சொர்க்கமாக வைத்திருப்பாள்.

 

மேலும், தேவதையைப் போலத் தன் மனைவியை வைத்திருப்பது என்றால், காஞ்சிபுரம் சேலையைக் கட்டி, சுமக்க முடியாத அளவிற்கு நகைகளை அணிவித்து அழகு பார்ப்பதல்ல. முதலில் பெண்ணின் உடற் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

 

உடற் தேவைகளே மனிதப் பிறவியின் முதற் தேவைகள். ஆகவே, மனைவியின் முதற் தேவையான உடற் தேவைகளை முதலில் பூர்த்தி செய்ய ஒவ்வொரு கணவனும் கற்றுக் கொள்ள வேண்டும் எனப் பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன்பே எடுத்துச் சொன்னவர்கள் தமிழர்கள்.

 

மனித நாகரீகத்தின் துவக்க காலத்தில் உலகம் முழுவதும் ஒரே மதம் தான் இருந்திருக்கிறது. அதன் தலைமையகமாக ஆசீவகம் திகழ்ந்திருக்கிறது என்கிற கூற்றை மெய்ப்பிக்கும் விதமாக, ஆசிய, சுமேரிய, மெசபடோனிய, எகிப்திய, கிரேக்க, ரோமானிய, பாபிலோனிய நாகரீகங்கள் அனைத்திலும் பொதுவான ஒரு வடிவம் வழிபடத் தக்கதாய் இருந்திருக்கிறது.

 

அந்த வழிபடும் வடிவங்கள் இன்றளவிலும் அங்கெல்லாம் இருக்கின்றன. சில இடங்களில் வழிபடப் படுகின்றன. சில இடங்களில் வழிபடும் வழக்கம் மட்டும் மறைந்து விட்டது என்பது மட்டுமே ஒரு கொசுறுத் தகவல்.

 

ஆகவே, காமத்தின் உண்மையான சக்தியை உணர்ந்திருந்தது மட்டுமன்றி, மனித செயல்கள் அனைத்தும் காமத்தின் வெளிப்பாடுகளே என்று உலகிற்கே உணர்த்திய பூமி, தமிழ்நாடு.

 

ஆனால், அதை பிராய்டும், கின்சியும், கார்ல் ஜங்கும், மாஸ்டர்ஸ் அண்ட் ஜான்சனும், கிரேஃபென் பெர்க்கும், ஆல்ஃபிரேட் கெகலும், நெப்போலியன் ஹில்லும் சொல்லும் உண்மைகளாக உலகம் பார்க்கிறது. உண்மையில் காமம் பாவகரமானது என்கிற கருத்தை உலகில் உருவாக்கியவர்கள் மேற்கத்தியர்கள்.

 

காமத்தின் மேன்மையைப் பற்றிக் கூறப்படுகின்ற கருத்துக்களை யெல்லாம் ஏதோ ஒரு மேற்கத்திய சிந்தனை போல, தீண்டத் தகாத ஒன்றைப் பார்ப்பது போல், நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

 

சங்க கால அக இலக்கியங்களும், திருக்குறளும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்ட செம்மொழி நூல்கள் என்பதையும், ஒரு தார வாழ்வில் காமத்தின் சக்தியைப் பற்றிப் பேசவும் அறிவுறுத்தவும் அவை கடுகளவு கூடத் தயங்கவில்லை என்பதையும் முற்றிலும் மறந்து விட்டு, காமத்திற்கு எதிராக நம்மில் சிலரே கூட பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

 

மனிதப் பிறவியின் ஒவ்வொரு செயலையும் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்ற காமத்திற்கு சாஸ்திரம் பாடி, சூத்திரம் எழுதி, இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே, மனித குலத்திற்குக் கொடையளித்தவர்கள் தமிழர்கள்.

 

ஞானிகளுக்கெல்லாம் ஞானியாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்ற, ஒரு மகா ஞானியால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பத்தாயிரம் சுலோகங்களில் காம சாஸ்திரம் இயற்றப்பட்டது.

 

அப்போது ஓலையில் எழுதும் வழக்கம் கூடக் கண்டு பிடிக்கப்பட வில்லை. அதனால், சித்தர்களால் செவிவழி அறிவாகவே பல்லாயிரம் ஆண்டுகள் அந்த சுலோகங்கள் பாடப் பட்டு வந்தன. அதன் காரணமாக ஏராளமான சுலோகங்கள் மறக்கப் பட்டு, வெறும் ஐநூறு சுலோகங்களாகக் காம சாஸ்திரம் குறுகிப் போயிற்று.

அவ்வாறு குறுகிப் போன ஐநூறு சுலோகங்கள் தான் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வாத்சாயன முனிவரால் காம சூத்ராவாக எழுத்து வடிவம் பெற்றது. கூடவே, கஜூராகோ கோவிலில் அவையனைத்தும் அழியாத சிற்பங்களாகவும் செதுக்கி வைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் மூன்று பெண்களின் காம உணர்வைத் தன்னந் தனியாக ஒரு ஆண் திருப்தி செய்யும் சிற்பம் இன்றளவிலும் அங்கே இருக்கிறது.

அதன் பின், ஒவ்வொரு சித்தரும் அவரவர் காலத்தில் நூல்களாக வடித்து வைத்தனர். அவ்வாறு எழுதப்பட்ட நூல்களில் மக்கள் கைக்குக் கிடைக்கக் கூடிய வகையில், அனங்க ரங்கா, ரதி ரகசியங்கள், ரதிரத்ன பிரதீபிகா, மணக்கும் தோட்டம், போன்ற முப்பது நூல்கள் மட்டுமே இருக்கின்றன.

 

இவையனைத்தும் உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் கிடைக்கப் பெறுகிற நூல்கள். அறிஞர்கள் அத்தனை பேராலும் படிக்கப் படுகின்ற, புத்திசாலித் தனமாக வாழ்க்கையில் பின் பற்றப் படுகிற நூல்கள்.

 

ஆனால், ஆங்கிலப் புலமையுள்ள ஒரு சிலரைத் தவிர, பெரும்பாலான தமிழர்களின் பார்வையில் மேற்கண்ட நூல்கள் படுவதேயில்லை. தவறிப் பட்டு விட்டாலும், காமம் குறித்த தவறான கருத்தால், பெரும்பாலான தமிழர்கள் மேற்கண்ட நூல்களைப் புறக்கணித்து விடுகிறார்கள். அதனால், இலங்கை, இந்திய ஆண்களில் பலர் பாலியல் அறியாமை மிக்கவர்களாக இருக்கிறார்கள்.

 

மனைவியை போகப் பொருளாக நடத்துதல், வீட்டிற்குள்ளேயே வன் கொடுமை, இரவு நேரச் சண்டை போன்ற மடமைகளுக்கு அந்த அறியாமை தான் வித்திடுகிறது. பாலியல் அறியாமை தான், பல ஆண்களைக் குடிகாரர்களாக உருமாற்றுகிறது.

 

பாலியல் அறியாமை தான், குடும்ப வாழ்க்கையை வாழும் நரகமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. அதனால், குடும்ப அமைப்பே கூடத் தகர்க்கப் பட்டு விடுமோவென அஞ்சும் அளவிற்கு நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது.

 

பகிரங்கமாகப் பகிர்ந்து கொள்ள முடியாமல் பல ஆண்கள் மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். கிடைத்த மடியில் முகத்தைப் புதைத்துக் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.

 

கதறியழக் கூட மடி கிடைக்காதவர்கள் தங்கள் கனவுகளைத் தொலைத்து விட்டு, பொறுப்பற்ற பராரிகளாக, குடிகாரர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். கோழைகளாக இருப்பவர்கள், உலகை எதிர் கொள்ள முடியாமல், தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

 

உயிர்வாழ முயற்சிப்பவர்களின் ஆயுள் கூட, துயரம் காரணமாக குறைந்து போகிறது. இல்லற வாழ்வின் இன்றைய நிலைமை அந்த அளவிற்குக் கொடூரமானதாக மாறிக் கொண்டிருக்கிறது.

 

மேற்கண்ட நிலைமையை வெற்றிகரமாக எதிர் கொண்டு, குடும்ப வாழ்க்கையைச் சொர்க்கமாக மாற்றிக் கொள்வதற்குரிய ஞானத்தை, தமிழ் சித்தர்கள், ஞானிகள் அளித்துச் சென்றிருக்கிறார்கள்.

 

அந்த ஞான வழிமுறைகளைத் தான், சமஸ்கிரதப் புலமையோ, ஆங்கிலப் புலமையோ அல்லது சங்கத் தமிழ்ப் புலமையோ இல்லாத சாமான்ய குடும்பத் தலைவர்களோடு, இன்றைய வார்த்தைகளில் இந்த நூல் பகிர்ந்து கொள்கிறது.

 

தமிழ்நாடு என்கிற புனித மண்ணின் முன்பும், இப் புனித மண்ணில் தோன்றி, மனித குலத்திற்கு அளப்பரிய சேவை புரிந்துள்ள ஞானிகள் முன்பும், நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்கி, தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, நூல் தன் பயணத்தைத் துவக்குகிறது.

 

0% Complete