நன்றியறிவிப்பு
நான் ஒரு பிறவி மேதை அல்ல. உலக அறிவைப் பொறுத்தவரை, உங்களில் பலரை விட, அப்பாவியாகவே நான் வாழ்ந்திருக்கிறேன், ஆனால், அவற்றை அனுபவிப்பதோடு நின்று விடாமல், நான் சந்தித்த அதனால், எண்ணற்ற அனுபவங்களை நான் பெற்றிருக்கிறேன். ஒவ்வொரு அனுபவமும் ஏன் நிகழ்ந்தது என்கிற காரணத்தை தேடத் துவங்கினேன். தேடலின் போது பல விடைகளைக் கண்டேன். அந்த விடைகளில் – நிரூபிக்க முடிந்த விடைகளை மட்டும் – நூல் வாயிலாக உங்களோடு நான் பகிர்ந்து கொள்கிறேன்.
என் இடையறாத் தேடலின் போது, எண்ணற்ற நூல்களை நான் வாசித்திருக்கிறேன். வாசித்தவற்றைப் பயன்படுத்தி வெற்றியும் பெற்றிருக்கிறேன். ஆனால், எந்த நூலின் வாயிலாக எந்தத் திறனைக் கற்றுக் கொண்டேன் என்பதை, என்னால் விண்டுரைக்க முடியாது. அதனால், உலகில் இதுவரை தோன்றி மறைந்துள்ள மற்றும் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற, எல்லா நூலாசிரியர்க்கும், என் மனப் பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எச்சரிக்கை.
செல்வந்தர் வீட்டில் பிறந்த ஒரே காரணத்தால், செல்வந்தராக இருப்போரை நாம் அறிவோம். ஆனால், அவர்களுடைய முன்னோரும் நம்மைப் போல் தான் வாழ்ந்திருப்பார்கள். அவ்வாறு வாழ்ந்து கொண்டிருந்த போது, ஏதோ ஒரு வழியில், மன நோய்களிலிருந்து அவர்கள் விடு பட்டு விட்டார்கள். அதனால், அவர்கள் செல்வந்தராக உருவாகி விட்டார்கள். அவ்வகையில், ஒருவருடைய மன நோய்களைக் குணமாக்கி, அவரைச் செல்வந்தராக உருவாக்க முயற்சிக்கும் நூல் இது.
ஆனால், இதைப் படிப்பதால் மட்டுமே ஒருவர் செல்வந்தராக உருவாகி விட முடியாது. நூல் சொல்வது போல் செயல் பட்டு, அவரவர் மன நோய்களிலிருந்து, அவரவர் விடு பட வேண்டும். மேலும், அவரவர் மனம் பக்குவப் படுத்தப் பட்டிருப்பதற்கு ஏற்பத் தான் விளைவுகள் நிகழும். பலன் விளைவதற்கான காலம் கூடலாம். குறையலாம்.
ஆகவே, இந்த நூலைப் படித்தும், என்னால் பணக்காரனாக முடியவில்லை என்றோ, இன்ன பிற தீமைகள் நடந்து விட்டது என்றோ, ஆசிரியர் மீதோ, அச்சிட்டவர், பதிப்பித்தவர், விற்பனையாளர் மீதோ சொல்லப் படும் எந்தக் குற்றச் சாட்டுகளுக்கும், அவர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள் என்று சட்ட பூர்வமாகத் தெரிவிக்கப் படுகிறது.