fbpx
Course Content
2k Kids காதல் அறிவியல்
0/47
2k Kids Love Science
About Lesson
தாய்க்கான ஆயுதம் இந்நூல்

 

ஒரு உயர் நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பின் வகுப்பாசிரியை, தலைமையாசிரியரைச் சந்தித்து, ஒரு அதிர்ச்சிகரமான தகவல்களைத் தெரிவிக்கிறார். என் வகுப்பில் பயிலும் குறிப்பிட்ட நான்கு மாணவிகளைப் பார்த்தால், சந்தேகமாக இருக்கிறது. அவர்கள் நால்வரும் கர்ப்பமாக இருக்க கூடும் என்று நான் ஐயுறுகிறேன்.

 

உடலில் மிளிர்ச்சி அவ்வாறு உள்ளது. என் கணிப்பு உண்மையாகவும் இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம். கணிப்பு தவறாக இருந்து விட்டால் மகிழ்ச்சி. ஆனால், சரியாக இருந்து விட்டால் நாம் என்ன செய்வது?

 

பத்தாம் வகுப்பு மாணவிகள் கர்ப்பம் என்கிற தகவல் வெளியில் தெரிந்தால், பள்ளியின் பெயர் கெட்டுப் போகும். அதோடு, வகுப்பாசிரியை என்கிற முறையில் நானும், தலைமையாசிரியர் என்கிற முறையில் நீங்களும் பாதிக்கப் படுவோம். ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாம் ஏதாவது செய்தாக வேண்டும்.

 

காதல் விவகாரத்தைப் பொருத்த வரை, ஒரு பெண்ணால் ஆயிரம் ஆண்களை ஏமாற்ற முடியும். ஆனால், தண்னையொத்த ஒரு பெண்ணை ஏமாற்ற முடியாது. தலைமை ஆசிரியருக்கு இது தெரியும்.

 

அதனால், எதேட்சையாக  வருவது போல், வகுப்புக்கு வந்து, மாணவிகளைப் பார்த்தார். அவர்களுக்கும் ஐயம் ஏற்பட்டது. மாணவிகளைத் தனியாக அழைத்து விசாரிக்கலாம். ஆனால், கணிப்பு தவறாகி விட்டால், அந்த மாணவிகளின் பெற்றோர் படை திரட்டிக் கொண்டு வந்து விடுவார்கள்.

 

பதினைந்து வயதே ஆன குழந்தைகளிடம் கர்ப்பமாக இருக்கிறாயா என்று எவ்வாறு விசாரிக்கலாம்? நாங்கள் அப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களா? என்று சண்டைக்கு வந்து விடுவார்கள்.

 

ஒருக்கால், கணிப்பு சரியாகவே இருந்து விட்டாலும், ஆசிரியர்களுக்குத் தெரிந்து விட்டதே என்று பயந்து, பள்ளி விட்டவுடன் வீட்டுக்குச் சென்று, மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளக் கூடும்.

 

அதனாலும், ஆசிரியர்களுக்கு ஆபத்து. ஏனெனில், பிரேதப் பரிசோதனையில் கர்ப்பம் பற்றிய தகவல்கள் தெரிந்து விடும். அதனாலும் பள்ளியின் பெயர் நாசமாவதோடு, மாணவிகளின் கர்ப்பத்துக்குக் காரணமே ஆசிரியர்கள் தான் என்கிற கருத்தை யாராவது உருவாக்கி விடலாம்.   ஆகவே, உணர்ச்சிகரமான பிரச்சினையாக உருவாகும் திறன் கொண்ட இந்தச் சூழலைக் கையாள்வது எப்படி என்று உளவியல் அறிஞர்களிடம் ஆலோசனை பெற்று, அதன் படி செயல்படுகிறார்கள்.

 

அடுத்த நாள், மருத்துவக் குழு ஒன்று, பள்ளிக்கு வரும் படி, ஏற்பாடு செய்யப் பட்டது. “இறுதித் தேர்வுகள் நெருங்குகிறது. அதை முன்னிட்டு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. கலந்து கொள்ளுங்கள்” என்கிற தலைப்பின் கீழ் முதல் வேலையாக குறிப்பிட்ட மாணவிகளைக் கொண்ட பத்தாம் வகுப்பு மாணவிகள் அனுப்பப் பட்டனர்.

 

அதையடுத்து கண்துடைப்பாக, பிறருக்கும், அது நீடிக்கப் பட்டது.   மருத்துவ அறிக்கையின் படி, நான்கு மாணவியரும் கர்ப்பமாக இருந்தனர். உடனடியாக அவர்களுடைய பெற்றோர் பள்ளிக்கு வரவழைக்கப் பட்டனர். விவரம் கூறப்பட்டு, பெற்றோர் வசம் மாணவிகள் ஒப்படைக்கப் பட்டனர்.

 

விசாரணையில் மாணவிகளின் காதலர்கள் பற்றிய தகவல் தெரிந்தது. பள்ளியின் பெயர் காப்பாற்றப் பட்டது. ஆசிரியர்களுக்கு நிம்மதி பிறந்தது. ஆனால், எல்லா தருணங்களிலும் கண்டுபிடிப்பது சாத்தியமா? ஆசிரியரைக் கொண்ட வகுப்பில் எவ்வாறு கண்டு பிடிப்பது? மேலும், கர்ப்ப நிலையில், இந்தக் குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டால், அதை எவ்வாறு எதிர்கொள்வது?

 

கர்ப்பமாக்கிய ஆண்களே, குழந்தைகளை மறைவுப் பகுதிக்கு அழைத்துச் சென்று, கிணற்றில் தள்ளிக் கொலை செய்து விட்டு, அந்தப் பழியைப் பள்ளியின் மீது திட்டமிட்டுச் சுமத்தினால், என்ன செய்வது?   ஏன் இவ்வாறு நிகழ்கிறது? பதின் பருவக் குழந்தைகளைக் காதலில் விழும் படித் தூண்டும் காரணிகள் எவை?   காதலில் விழுந்தாலும், பதினைந்தே வயதில் கர்ப்பம் தரிக்கும் அளவிற்கு காதல் முற்றிடக் காரணம் என்ன?

 

குழந்தைகளுக்குத் துணிச்சலைத் தருவது எது?   கல்வி பயில வேண்டிய பதின் பருவத்தில், காதற் படு குழியில் விழுந்து கல்வியை நாசமாகிக் கொள்ளாமல், குழந்தைகளைத் தடுப்பது எப்படி?

 

இள வயது கர்ப்பங்களைத் தடுப்பது எப்படி?

 

தங்கள் எதிர்காலத்தை கெடுத்துக் கொள்ளாத, புத்திசாலிகளாகப் பெண் குழந்தைகளை உருவாக்குவது எப்படி?

 

பதின் பருவக் காதல், பள்ளிக்குள் உருவாகாதவாறு ஆசிரியர்கள் மட்டுமே, கண்காணித்து விட முடியுமா? கட்டுப்படுத்த முடியுமா?

 

முடியும் என்றே வைத்துக் கொண்டாலும், பள்ளிக்கு வெளியே நடக்கும் காதல் விவகாரங்களைக் கண்காணிக்க, ஆசிரியர்களால் முடியுமா? அது தொடர்பாகக் கண்டிக்க முடியுமா?

 

யாரேனும் ஒரு ஆசிரியர் துணிந்து கண்டிக்கப் போய், கண்டிப்புக்கு ஆளான குழந்தை, தன் காதலுக்குக் குறுக்கே நிற்கும் ஆசிரியர் மீதே, ஏதேனும் பழிபோட்டுக் கடிதம் எழுதி வைத்து விட்டுத் தற்கொலை செய்து கொண்டால், அந்த ஆசிரியரைக் காக்கப் போவது யார்? அல்லது கண்டித்த ஆசிரியரின் மீதே, “பாலியல் பழி” போட்டு, ஊரைத் திரட்டிக் கொண்டு வந்து விட்டால், ஆசிரியர் என்ன செய்வது?

 

சக ஆசிரியர்களே அதை ஊதிப்பெருக்கி பணி நீக்கம் வரை கொண்டு சென்று விடுவார்களே! பணியை இழப்பதோடு, அசிங்கமாக அவமானப் படும் சூழல், ஆசிரியர் வாழ்வில் ஏற்பட்டு விடுமே!

 

ஆங்காங்கே இவ்வாறு நிகழ்ந்து கொண்டு தானே இருக்கிறது.

 

மேலும், அந்தக் குழந்தையின் காதலனால், ஆசிரியருக்குக் கேடு நேரக் கூடும் என்கிற ஐயத்தையும் உதாசீனப் படுத்தி விட முடியாதே!

 

ஆசிரியர்கள் ஒதுங்கிக் கொள்வதே நல்லது என்கிற முடிவுக்கு வந்து விடுவோம். ஆனால், பதின் பருவம் என்பது மிகவும் ஆபத்தான பருவம். “எடுத்தேன் கவிழ்த்தேன்” என்று முடிவெடுக்கும் பருவம்.

 

அதனால், ஏதோ ஒரு குழந்தையின் காதல் தோல்வியில் முடிந்து விடலாம். தன் காதல் தோற்றதும் உலகமே இருண்டு விட்டதாய்க் கருதி, மனம் தளர்ந்து, அக்குழந்தை தற்கொலை செய்து கொள்ளலாம். அத்தகைய அசம்பாவிதம் ஏதேனும் நிகழ்ந்து விட்டால், அது மட்டும் பள்ளியின் பெயரைக் கெடுத்து விடாதா?

 

கணித ஆசிரியர் கண்டித்தால் தற்கொலை! பௌதீக ஆசிரியை திட்டியதால் தற்கொலை! உடற்கல்வி ஆசிரியரின் தவறான பார்வை காரணமாக மாணவி தற்கொலை! என்று பரவும் செய்தியை எவ்வாறு எதிர்கொள்வது?

 

பள்ளிப் பருவப் போலிக் காதலை ஆசிரியர்களே கவனித்துக் கொள்வார்கள் என்று நம்பினாலும், கல்லூரிப் பருவத்தில் உருவாகும் போலிக் காதலிலிருந்து, பணியிடங்களில் உருவாகும் போலிக் காதலிலிருந்து, குழந்தைகளைக் காக்கும் திறனோ, வாய்ப்போ, உரிமையோ பள்ளி ஆசிரியர்களுக்கு இல்லை.

 

மேலும், தேர்வுகள் முடிந்தவுடனே ஒவ்வொரு வருடமும் பல நூறு குழந்தைகள் காணாமல் போய் விடுகிறார்கள். பதிவாகும் கணக்கு இது. பதிவாகாதவை எத்தனையோ! இவற்றையெல்லாம் ஆசிரியர்களால் தடுக்க முடியுமா?

 

இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ளப் பெற்றோரின் ஒத்துழைப்பை ஏன் பெறக் கூடாது? சமூக விரோதிகளால் பச்சிளம் குழந்தைகள், மழலையர், சிறுவர் சிறுமிகள் கடத்தப் படுகிறார்கள். அவர்களிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பாக வளர்க்கும் பெற்றோரே. காதல் என்கிற பெயரில் பதின் பருவக் குழந்தைகளைக் கடத்தும் கயவர்களிடமிருந்து குழந்தைகளைக் காக்கும் பொறுப்பையும் ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது?

 

காதல் படுகுழியில் விழுந்து திசைமாறிப் போய் விடாமல் குழந்தைகளைக் காக்கும் கடமையை ஆற்றிட, அதற்குரிய வழிமுறைகளைப் பெற்றோர் கற்றுக் கொள்வது தானே சாலச் சிறந்தது?

 

ஏட்டுக் கல்வியைப் பொறுத்த வரை, ஆசிரியர் நூறு தாய்களுக்குச் சமம். ஆனால், வாழ்க்கைக் கல்வியைப் போதிப்பதில், தாய் நூறு ஆசிரியர்களுக்குச் சமம்.

 

அதாவது “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே. அவர் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பதிலே” என்கிற ஒரு தத்துவம் ஒரு பேருண்மை.

 

மேலும், குழந்தையொன்று காதலில் விழும் போது, அதன் தாய் தான் அதற்கு பலிகிடாவாகிறாள். “குழந்தையை வளர்த்த இலட்சணத்தைப் பார்என்று தாயைத் தான் குறை கூறுகிறார்கள். அதனால், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி விட்டு, மடியிலே நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பதும் தாய்மார்களே.

 

ஆனால், தாயின் சூழலைப் பற்றிக் கவலைப் படாத பல சுயநலக் காரணிகள், காதலிக்கும் படி குழந்தைகளைத் தூண்டி விடும் செயலை, மிகவும் வெளிப்படையாகவே செய்து கொண்டிருக்கின்றன.   ஆழ்மன அளவில் காதலிக்கும் படிக் குழந்தைகளைத் தூண்டி விடுபவை திரைப் படங்கள். சின்னத் திரையிலோ, காதலிக்கும் படிப் பிரச்சாரமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 

பதின் பருவத்தில் காதலிக்காமல் வேறு எப்போது காதலிப்பது என்று ஊடகவாதிகளும், சமூக ஆர்வலர்களும் கேள்வியெழுப்புகிறார்கள்.

 

கைபேசிகள், வலைத்தளம், வாகனம், பணம் என அனைத்தும் குழந்தைகளின் கையில் இருக்கிறது. கட்டுப்பாடற்ற சுதந்திரமும் குழந்தைகளுக்கு இருக்கிறது. அதோடு, ஒருவர் குழந்தையை மற்றவர் கவனிப்பதில்லை என்கிற கலாச்சாரமும் நிலவுகிறது.

 

அதனால், குழந்தைகளிடம் விளையாட்டைப் போல் காதல் நிகழ்கிறது.

 

குழந்தைகளின் அப்பா அம்மா விளையாட்டைப் பாருங்கள். ஒரு பிளாஸ்டிக் பொம்மையைத் தாங்கள் குழந்தையென, அவை கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கும். அது போல், காதலை இனங்காணும் பருவத்தை அடைவதற்கு ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பே, பதின் பருவக் குழந்தைகள் காதலிப்பதாகக் கூறுகிறார்கள்.

 

நட்பின் இலக்கணம் பற்றி எதுவுமே தெரியாமல், அறிமுகமுள்ள மனிதர்களையெல்லாம் நண்பர் எனக் கூறுவதைப் போல், காதல் என்பது எதுவென்றே தெரியாமல், காதலிப்பதாய் குழந்தைகள் கூறுகிறார்கள்.

 

அதனால், குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோருக்கும் போலிக் காதலுக்கும் இடையே நடக்கும் போராகவே மாறி விட்டது.   இந்நிலையில், காதலில் விழுந்து விடாமல், குழந்தையைக் கவனமாக வளர்ப்பது எப்படி என்பதைத் தாய்மார்கள் கற்றுக் கொள்வது தானே, உரிய பயனளிக்கும் செயலாக இருக்கும்?

 

ஆகவே, காதற் படுகுழியில் விழுந்து விடா வண்ணம், குழந்தைகளைக் காக்க விரும்பும் தாய்மார்களுக்கு உதவக் கூடிய ஒரு வழிகாட்டி நூலை ஏன் எழுதக் கூடாது? என்கிற சிந்தனையால் உருவானதே உங்கள் கையில் இப்போது உள்ள இந்த நூல்.

 

காணும் இடமெங்கிலும், காதலைத் தூண்டி விடும் காரணிகளின் மத்தியிலே வாழக் கூடிய, இன்றைய நவீன சூழலுக்குப் பலியாகி விடாமல், என் குழந்தையைக் காப்பது எப்படி?

 

பதின் பருவத்தில், எதிர்ப்பாலினத்தின் மீது உருவாகக் கூடிய இயற்கையான ஈர்ப்பை எதிர்கொண்டு, சமாளித்துக் கல்வியிலிருந்து கவனம் சிதறாவண்ணம் சுய கட்டுப்பாடு உடையவர்களாகக் குழந்தைகளை உருவாக்குவது எப்படி?

 

பதின் பருவக் குழந்தையின் ஒவ்வொரு மாதத்திலும் குறிப்பிட்ட நாட்களில் தவறாமல் உருவாகக் கூடிய காதல் காய்ச்சலால் திசை மாறிப்போய் விடாதவர்களாகக் குழந்தைகளை உருவாக்குவது எப்படி?

 

காதல் காய்ச்சலால் தாக்கப்பட்ட குழந்தை, நம் குழந்தையிடம் விண்ணப்பித்தால், அந்த விண்ணப்பத்தை நிராகரிக்கும் மனத் துணிவை நம் குழந்தைக்கு ஊட்டி விடுவது எப்படி?

 

எந்த வலையிலும் சிக்கி விடாமல், குழந்தைகளாகவே தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் ஏதாவது உள்ளதா?

 

அவற்றைக் குழந்தைக்குப் போதிப்பது எப்படி?

 

குழந்தையின் மீதான கவனம், கண நேரம் தவறினாலும், அந்தக் குழந்தையைப் பெற்றோரின் பரம விரோதியாக மாற்றிக் கல்வியைப் பாழாக்கக் காத்திருக்கும் காரணிகளின் வலையில் சிக்கி விடாத புத்திசாலியாகக் குழந்தையை வளர்ப்பது எப்படி?

 

பரம்பரைச் சொத்துடைய குழந்தை என் காதல் வலையில் விழாதா? எனக் காத்திருக்கும் காரணிகளின் உளவியல் பிடியில் சிக்கி விடாமல், குழந்தையைப் பாதுகாப்பாக வளர்ப்பது எப்படி?

 

பதின் பருவக் காதலில் சிக்கி, பாலுறவுக்கு அடிமையாகி, கருத்தடை மருந்துகளை உண்டு, உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளும் குழந்தையாக, மற்றும் எதிர்காலத்தில் தாயாகும் வாய்ப்பைத் தவற விடும் குழந்தையாக உருமாறி விடாமல், குழந்தையைக் காப்பது எப்படி?

 

பதின் பருவத்தில் உருவாகும் காதல் நோய் தவிர, வழக்கமான பதின் பருவத் தீமைகளான புகை, மது முதல், போதை மருந்துகள் ஈராக, வலைத்தளம் வரை பரவிக் கிடக்கின்ற தீய பழக்கங்களால், தீண்ட முடியாத திறன் கொண்டவர்களாய்க் குழந்தைகளை உருவாக்குவது எப்படி?

 

அதே போல், பெருகி வரும் வாகனங்களால் ஏற்படும் விபத்துக்கள், குழுவுணர்வால் உருவாகும் தகராறுகல், எதிர் பாராத் தோல்வியை எதிர்கொள்ள முடியாமல் மேற்கொள்ளப் படும் தற்கொலை முயற்சிகள் போன்ற வன் செயல்களில் ஈடுபடாத தன்னம்பிக்கை மிக்க குணவான்களாக குழந்தைகளை உருவாக்குவது எப்படி?

 

அதோடு, கல்வியிற் சிறந்த குடிமக்களாகவும், பண்புள்ள அறிவு ஜீவிகளாகவும் குழந்தைகளை உருவாக்குவது எப்படி? என்கிற புதிர்களுக்கு விடை கண்டு, குழந்தைகளைக் கவனமாக வளர்க்க விரும்பும் தாய்க்குத் தேவையான கல்வியை, இந்நூல் வழங்குகிறது.

 

குழந்தைகளின் எதிர்காலத்திற்கும், வளமான வாழ்க்கைக்கும், அடித்தளமாய் விளங்கக் கூடியது கல்வி.

 

குழந்தைகளை காதற் படுகுழியில் வீழ்த்தக் காத்திருக்கும் காரணிகளே, கல்வியின் எதிரிகள்.   அந்தக் காரணிகளின் வலையில் விழுந்து விடாமல், குழந்தைகளைப் பாதுகாப்பாய் வளர்க்க வேண்டியது, பெற்றோர் கடமை.

 

அந்தக் கடமையை முறையாய் ஆற்றிட முடிவெடுத்து விட்ட பெற்றோருக்கு, உரிய அறிவாயுதமாய், சரியான கேடயமாய், இந்நூலை வழங்க, என்னைப் பயன்படுத்திக் கொண்ட, பிரபஞ்ச சக்தியை வணங்கி, நன்றி கூறிய கையோடு, இனிதே நூலைத் துவங்குகிறேன்.

 

சமூகத்தின் பால் பேரன்பு கொண்டுள்ள

தி. சஜந்தன்

 

0% Complete