fbpx

What is love?

எது காதல்? எது காதல்? எது காமம்? எது மோகம்? எது இனக்கவர்ச்சி? என்பதைப் பற்றிய தெளிவான புரிதல் மக்களிடையே இல்லை.

 

அதனால், காமத்தால் உருவாகும் உறவையும் காதல் என்கிறார்கள்.

 

மோகத்தால் உருவாகும் உறவையும் காதல் என்கிறார்கள்.

 

இனக்கவர்ச்சியால் உருவாகும் உறவையும் காதல் என்கிறார்கள்.

 

காதலையும் காதல் என்றே அழைக்கிறார்கள்.

 

காதலுக்கும் போலிக் காதலுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை ஆயிரத்தில் ஒருவர் கூட, அறிந்திருக்கவில்லை.

 

இருபதாண்டுகளுக்கு முன்னால், கிராமப் புறங்களில் எரிபொருள் விநியோக நிலையங்கள் இருக்காது. அதனால், நகர்ப்புறத்திலிருந்து நாற்பது லிட்டர் அளவில் வாங்கி வந்து, சில்லறையில் விற்பனை செய்வார்கள்.

 

அவ்வாறு விற்றுக் கொண்டிருந்த ஒரு வியாபாரியை அணுகி, ஒருவர் பெட்ரோல் வாங்கினார். இனியொருவர் டீசல் வாங்கினார். இனியொருவர் மண்ணெண்ணெய் வாங்கினார். மேற்கண்ட மூவருக்குமே ஒரே பாத்திரத்தில் இருந்த திரவத்தையே வியாபாரி ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

 

மூவரும் ஆளுக்கொரு பொருளைக் கேட்டார்கள். ஆனால், மூவருக்கும் ஒரே திரவத்தையே ஊற்றிக் கொடுக்கிறீர்களே என்று கேட்ட போது சொன்னார்.

 

இந்த மூன்றுக்கும் இடையில் உள்ள வேறுபாடு யாருக்கும் தெரியாது. தீ வைத்தால் எரிய வேண்டும். அது தான் இந்த மூன்றுக்கும் உள்ள அடையாளம். ஆகவே, பெட்ரோல் என்று ஊற்றினால், அது தான் பெட்ரோல். டீசல் என்று ஊற்றினால், அது தான் டீசல். மண்ணெண்ணெய் என்று ஊற்றினால், அதுதான் மண்ணெண்ணெய்.

 

அது போல, பதின் பருவக் குழந்தைகள் பாலுறவில் ஈடுபடுகிறார்கள். கேட்டால் காதல் என்கிறார்கள். அடுத்தவருடைய திருமண இணையோடு பாலுறவில் ஈடுபடுகிறார்கள். கேட்டால் (கள்ளக்) காதல் என்கிறார்கள்.

 

எதிர்ப் பாலினத்தைச் சேர்ந்த இருவர் பாலுறவே கொள்ளாமல் பல வருடங்களாக, ஒருவருக்கு மற்றவர் உதவிகரமாக இருக்கிறார்கள். ஒருவருக்காக மற்றவர் தியாகம் செய்கிறார்கள். கேட்டால், காதல் என்றே அவர்களும் கூறுகிறார்கள்.

 

அப்படியெனில், எது தான் காதல்?

மேற்கண்ட கேள்விக்கான தெளிவான பதிலை நெற்றிப் பொட்டில் அடித்தாற் போன்ற பதிலை அளிப்பதே இந்த அத்தியாயத்தின் நோக்கம். அந்த விளக்கத்தை அளிக்கும் முன், காதல் குறித்த பொதுவான தகவல்கள் என்னவென்பதை பார்த்து விடுவோம்.

 

பருவ வயதில் சுரக்கத் துவங்கும் “ஹார்மோன்களின் லீலை தான் காதல்” என்று சொல்கிறது மருத்துவ அறிவியல்.

 

“காமத்திற்கான முன் விளையாட்டே காதல்” அதாவது, “பாலுறவிற்கான ஏற்பாடு தான் காதல்” என்கிறது உளவியல்.

 

“மனித குலத்தைத் தழைக்கச் செய்வதற்காக, ஆழ்மனம் நடத்தும் முயற்சியே காதல்” என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து.

 

“பெற்றோரிடம் பெற முடியாத அன்பை, மற்றவரிடம் பெறுவதே காதல்” என்பது பதின் பருவக் காதலர்களின் கருத்து.

 

“தனக்காகச் செலவளிக்க ஒரு இளிச்சவாயனைப் பெண் உருவாக்கிக் கொள்வதே காதல்” என்பது காதலில் தோல்வியடைந்த ஆண்களின் கருத்து.

 

“திருமணம் செய்யாமலே பாலுறவு கொள்ள விரும்பும் ஆணின் சூழ்ச்சியே காதல்” இது காதலில் தோல்வியுற்ற பெண்களின் கருத்து.

 

“விண்மீன்கள் அனைத்தையும், மாலையாய்க் கோர்த்து, காதல் இணையின் கழுத்தில் போட்டுப் பார்த்து மகிழ்வது காதல்” அந்த அளவிற்கு அன்பு கொள்வதே காதல் என்பது கவிஞர்கள் கருத்து.

 

“தாயன்பிற்கு இணையானது காதல்” என்பது காதலின் மகிமையை அனுபவ பூர்வமாக அறிந்தோர் கருத்து.

 

“காதல் புனிதமானது” என்பது தத்துவவாதிகளின் கருத்து.

 

மேற்கண்ட கருத்துக்களிலிருந்து எது காதல் என்பதைச் சராசரி மனிதன் புரிந்து கொள்ள முடியுமா? நிச்சயமாக முடியாது.

 

அதனால் தான், நெற்றிப்பொட்டில் அறைந்தாற் போல், இந்த நூல் சொல்கிறது. பாலுறவை மையப் படுத்தாமல், பண்பாற்றலை மையமாகக் கொண்டு, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உருவாகும் அன்பே காதல்.

 

காதல் பாலுறவோடு தொடர்புடையதல்ல. பாலுறவு ஒரு உப விளைவு. காதலின் உச்சத்தில் பழுக்கும் வேர்ப்பலா அது.

 

பெரும்பாலான தளங்களில் ஒத்துணர்வுடைய எதிர் பாலினத்தைச் சேர்ந்த ஒருவருடைய அழகைக் கண்டோ, அறிவைக் கண்டோ, குணத்தைக் கண்டோ, அபரிமிதமான திறமையைக் கண்டோ, அல்லது அவரிடமுள்ள ஏதோ ஒரு வித்தியாசமான சிறப்பைக் கண்டோ, மலைத்து, வியந்து, வாழ்ந்தால் இப்படிப்பட்டவரோடு தான் வாழ வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படுவது தான் காதலின் முதற்பொறி.

 

இந்த முதற்பொறி பிறக்கவே சில ஆண்டுகள் ஆகும்.

 

அதன்பின், எந்தத் திறனைக் கண்டு, எதிர்ப்பாலினத்தைச் சேர்ந்தவர் மீது காதற்பொறி பிறந்ததோ, அந்தத் திறனில் அவர் புதிய சிகரங்களைத் தொட, தன்னால் ஆன அனைத்தையும் செய்யத் தயாராவது. தேவைப்பட்டால் தன்னையே அர்ப்பணிப்பது, அவர் உயர உதவுவது தான் காதலின் தொடக்கம்.

இந்தத் தொடக்கம் நிகழவும் சில ஆண்டுகள் ஆகும்.

 

இணையிடம் குறை காணாதது, இணையின் மீது எந்தக் காலத்திலும், எந்தச் சூழலிலும் குற்றங் கூறாதது. இணையிடம் நிபந்தனை விதிக்காது, இணையிடமிருந்து எதையும் எதிர் பார்க்காதது, இணையோடு ஒப்பந்தம் போடாதது காதல்.

 

இணையின் நன்மைக்காக, இணையிடமிருந்து பிரிந்து செல்லவும் தயாராக இருப்பது காதல்.

 

இணைக்குக் கொடுப்பதில் மட்டுமே இன்பம் காண்பது, எந்த நிலையிலும் இணையோடு சண்டையிடாதது, இணையைத் தண்டிக்க முடியாதது காதல்.

 

நிபந்தனையின்றி இணையிடம் சரணடையத் தயாராக இருக்கும் நிலையை அடையும் போது, அது காதலாக உருவெடுக்கின்றது.

 

மேற்கண்ட அன்போடு உங்களை நேசிப்பவரே உங்கள் காதலர். மேற்கண்ட அன்போடு, நீங்கள் யாரை நேசித்துக் கொண்டிருக்கிறீர்களோ, அவரை நீங்கள் காதலிக்கிறீர்கள்.

 

மேற்கண்ட அன்பும், பண்பும் இல்லாமல், பாலுறவை மட்டுமே மையமாகக் கொண்டு, எதிர்ப் பாலின நபர்கள் இருவருக்கிடையே நெருக்கமான உறவை உருவாக்குவது போலிக் காதல். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பாலுறவு கொள்தல், பாலுறவு கொள்வதற்கென்றே திட்டமிட்டு வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்தல் என்பதே போலிக்காதலின் பண்பு.

 

கூர்ந்து கவனியுங்கள். இது பாலுறவை மட்டுமே மையமாய்க் கொண்டு உருவாகும் உறவாகும். பாலுறவால் கிடைக்கும் பரவச இன்பங்களையெல்லாம் இந்த உறவு எதிர் பார்க்காது.

 

அதாவது, காதலால் விளையும் கபடமற்ற அன்பு குறித்தோ, பாலுறவால் நிகழும் உச்சகட்ட இன்பங்கள் குறித்தோ எதுவும் தெரியாமலே, இனச் சேர்க்கையை மட்டுமே மையமாகக் கொண்டு, எதிர்ப் பாலினங்களுக்கு இடையே குருட்டுத்தனமான உறவொன்று உருவாகும். அந்த உறவாலும் நெருக்கம் பிறக்கும். அந்த நெருக்கத்தை உருவாக்கும் உணர்ச்சிக்கு தான் இனக்கவர்ச்சி என்று பெயர். இனக்கவர்ச்சியால் உருவாகும் அன்பின் பெயரே மோகம்.

 

மோகத்துக்குப் பின்னால், ஒரு நோக்கம் இருக்கும். அதாவது, மிருக வகை நோக்கம் கொண்டதே மோகம். தன் இனத்தைத் தழைக்கச் செய்யும் பொருட்டு, புதிய உயிர் ஒன்றை உருவாக்குவதே அந்த நோக்கம்.

 

புதிய உயிர் ஒன்றை உருவாக்கும் பொருட்டே மிருகங்கள் ஒன்றையொன்று கவர்ந்து கொள்கின்றன. வேறெந்த உள் நோக்கமும் மிருகங்களின் இனக்கவர்ச்சியின் பின்னால் இல்லை. அதே போன்ற கபட மற்ற மிருக வகை ஈர்ப்பு தான் இனக்கவர்ச்சி.

 

இதை இனங்காண்பது மிகவும் எளிது.

 

கண்டவுடனே ஈர்ப்பை உருவாக்குவது இனக்கவர்ச்சி. எந்நேரமும் இணையோடு சேர்ந்தே இருக்க வேண்டுமென நினைப்பது இனக்கவர்ச்சி.

 

உறவுகள் அனைத்தையும் துச்சமாய்க் கருதித் தூக்கியெறியச் செய்வது இனக்கவர்ச்சி.

 

சந்தேகத்தையும், சண்டையையும் பிரசவிப்பது இனக்கவர்ச்சி. இரக்கமும், கருணையும், இல்லாத உணர்ச்சி இனக்கவர்ச்சி.

 

நியாய அநியாயங்கள் குறித்த கவலையற்றது இனக்கவர்ச்சி. பகுத்தறியும் திறனற்றது, குருட்டுத்தனமானது இனக்கவர்ச்சி. வெறித்தனமான அன்பை உருவாக்குவது இனக்கவர்ச்சி.

 

இந்த அன்பின் காரணமாகக் காதலைப் போன்றே காட்சியளிக்கும் இயல்புடையது இனக்கவர்ச்சி. வெறி தற்காலிகமானது. ஆகவே, சொற்ப காலம் மட்டுமே நிலவும் மோகத்தை உருவாக்குவது இனக்கவர்ச்சி.

 

இனக்கவர்ச்சியால் ஏற்படும் நெருக்கம் ஒரு தற்காலிகப் பித்தம். உடனடியாகப் பாலுறவு கொள்ளத் தூண்டும் பித்தம். பாலுறவு கொள்வதற்காகவே திருமணம் செய்து கொள்ளச் சொல்லும் பித்தம். பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காத பித்தம். அடுத்தவர்களுக்கு நேரக்கூடிய தீங்கைப் பற்றிக் கடுகளவு கூடக் கவலைப் படாத பித்தம்.

இனக்கவர்ச்சியால் உருவாகும் மேற்கண்ட பித்தமானது, தன் இணையைக்காண முயலாத போது, நீர்த்துப் போகும். ஒரு மாதம் பிரித்து வைத்தால், காதலர்களுக்கு இடையே உள்ள வெறித்தனமான அன்பு நீர்த்துப் போகும். இரண்டு மாதம் பிரித்து வைத்தால், அன்பு அடியோடு செத்துப் போகும்.

 

ஆனால், பிரிப்பது கடினம். தேர்ந்த உளவியல் அணுகுமுறை தேவைப்படும். உளவியல் அணுகுமுறையின்றி முட்டாள்த்தனமாகக் குழந்தைகளைப் பிரிக்க முயன்றால், தற்கொலை செய்து கொண்டு செத்துப் போகச் செய்து விடும் வல்லமை மிக்கது இனக்கவர்ச்சி.

 

காதலைப் போன்றே தோற்றமளிக்கின்ற இனியொரு நெருக்கமும் உள்ளது. இந்த நெருக்கம் பாலுறவை மட்டுமே மையமாகக் கொண்டு, உருவாகக் கூடிய நெருக்கம்மல்ல.

 

பாலுறவால் கிடைக்கக் கூடிய பரவச இன்பங்களை மையமாகக் கொண்டு, எதிர்ப் பாலினத்தினரிடையே உருவாக்கும் நெருக்கம் இது.

 

அதாவது, பாலுறவே நிகழ்ந்தாலும், அதன் மூலம் நிகழ வேண்டிய உச்சகட்டப் பரவச இன்பங்கள் நிகழா விட்டால், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உருவாகியுள்ள நெருக்கம் செத்துப் போகும்.

 

அதனால், இருவருக்கும் இடையே உருவாகியுள்ள உறவு அறுந்து போகும். இந்த நெருக்கத்தை உருவாக்கும் உணர்ச்சியின் பெயர் தான் காமம்.

 

பாலுறவைப் பற்றியோ, பாலுறவால் கிடைக்கக் கூடிய பரவச இன்பங்களைப் பற்றியோ, எது சிந்திப்பதில்லையோ, அதுவே காதல்.

 

பார்க்கா விட்டாலும், பேசா விட்டாலும், சாகாதது காதல். உடல் ரீதியாக இவர்களைப் பிரிப்பது எளிது. ஆனால், யாராலும், எந்தச் சம்பவத்தினாலும், எத்தகைய தண்டனையாலும் உளரீதியாக இவர்களைப் பிரிக்க முடியாது.

 

பத்தாண்டுகள் பிரித்து வைத்தாலும், பதினோறாம் ஆண்டு இருவரும் இணைந்து விடுவார்கள்.

 

இடற்பாட்டைக் கண்டு காதல் அஞ்சாது. மரணம் வரை காதல் சாகாது. இணைய முடியாமலே போய் விட்டாலும், மரணம் வரை பிரிந்தே வாழ வேண்டியிருந்தாலும், தன் இணையைச் சபிக்காதது காதல்.

நினைத்து நினைத்தே நெஞ்சம் உருகி, தூரத்திலிருந்தே கண்டுகளித்து, மகிழும் திறனுடையது காதல். தியாகம் இங்கே சாதாரணம்.

 

கொலை மற்றும் தற்கொலை நோக்கித் தள்ளாத உணர்வு காதல்.

 

இந்தக் காதல் தான் புனிதமானது. தெய்வீகமானது. தாயன்புக்கு இணையானது. பண்பாற்றலின் உச்சமாக விளங்கக் கூடியது.

 

எளிமையாகப் புரிந்து கொள்வதற்காக ஒற்றை வாக்கியத்தின் வாயிலாக அளிக்கப்படும் விளக்கம் இது.

 

கண்டதும் ஏற்படும் ஈர்ப்பு காதல் அல்ல. அது தான் போலிக் காதல். அதை உருவாக்குவது இனக்கவர்ச்சி.

 

பாலுறவு கொள்வது காதல் அல்ல. அது தான் மோகம். இனக் கவர்ச்சியால் உருவாகும் அன்புக்குப் பெயர் தான் மோகம்.

 

இனக் கவர்ச்சியால் உருவாகும் அன்பு வெறித் தனமானது. ஆனால், நிலையற்றது. அதாவது, இனக் கவர்ச்சியால் உருவாக்கும் போலிக்காதல் அசலான காதலை விடக் கூடுதலான அன்பைப் பொழியும். ஆனால், விரைவில் வெறுப்புத் தட்டி விடும். நியாய அநியாயங்கள் குறித்த கவலையற்றது இனக்கவர்ச்சி.

 

இணையைப் பிரிந்திருக்க மறுப்பது காதல் அல்ல. ஏனெனில், பிரிந்தால், தன் இணை வேறொருவரோடு இணைந்து விடக் கூடும் என்கிற ஐயம் அங்கே உள்ளது.

 

ஐயுறும் பண்புடையது போலிக் காதலே தவிர, புனிதக் காதல் அல்ல. சாயம் வெளுத்துப் போகும் என அஞ்சுவது, போலியின் இயல்பு.

 

பெற்றோரை எதிர்த்துப் போரிடச் செய்வது போலிக்காதலே. உறவுகளை மதிக்கும் பண்புடையதே, காதல்.

 

உறவுகளைச் சுருக்குகிற எதுவும் காதல் அல்ல. உறவுகள்  அனைத்தையும் துச்சமாகக் கருதச் செய்வது, போலிக்காதலே.

 

இருசக்கர வாகனத்தில், ஓட்டுநர் மீது படுத்து, முத்தமிட்ட படியே பயணம் செய்வது காதல் அல்ல. இது மோகம்.

பெற்றோர் எதிரில் செய்ய முடியாத சேட்டைகள் அனைத்தையும், பிறர் முன் செய்ய வைப்பதும், போலிக் காதலே.

 

இரண்டாம் பாலுறுப்புகள் மட்டுமே பங்கேற்கும் பாலுறவைப் பிறருக்கெதிரில் மேற்கொள்வதும், போலிக்காதலே.

 

தங்கள் அந்தரங்கங்களைப் புகைப்படம் எடுத்தல் காதல் அல்ல. இதுவும் போலிக்காதலே.

 

பொது இடத்தில் பாலுறவு கொள்வது, காதல் அல்ல. மோகமும், காமமும் தான் இதன் மூலப் பொருட்கள்.

 

தன் இணையின் பெயரைக் கெடுக்க முயற்சிக்கும் எதுவும் காதல் அல்ல. அது தான் காம வெறியின் உச்சம்.

காதலித்த காலத்தில் எடுத்துக் கொண்ட புகைப் படங்களைக் காட்டி அச்சுறுத்துதல் நிச்சயமாகக் காதல் அல்ல. பிளாக்மெய்ல்” செய்வது போலிக்காதல்.

 

மணமேடையேறி திருமணத்தை நிறுத்துவதும் போலிக்காதலே. வன்முறை மூலம் காதல் உருவாகாது என்பது காதலுக்குத் தெரியும்.

 

நிரந்தரமாகப் பிரிந்து விட விரும்பும் இணையை வலுக் கட்டாயமாக இழுத்துப் பிடிப்பதும், போலிக்காதலே.

 

தன் இணை தன்னைப் பார்க்க விரும்பாத போது, செத்துப் போக முடிவெடுப்பது காதல் அல்ல. இணையின் விருப்பத்தை ஏற்பதே காதல். இணையின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சிப்பதே காதல். தன் துன்பத்தைப் பொருட்படுத்தாமல், இணையின் நோக்கம் நிறைவேற ஒத்துழைப்பதே, உழைப்பதே காதல்.

 

தன்னைத் திருமணம் செய்து கொள்ள மறுப்பவர் முகத்தை, அமிலம் வீசிச் சிதைத்தல், போலிக்காதலே.

 

தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப் படாதது, காதல் அல்ல. போலிக்காதலே எதற்கும் கவலைப் படாது.

 

எதிர் இனத்தின் அன்பை எடையிட முயல்வதும், பரிசோதித்துப் பார்ப்பதும், போலிக்காதலே.

 

எதிர்ப்பாலின நபரைத் திட்டமிட்டு அலைக்கழித்து வேடிக்கை பார்ப்பது காதல் அல்ல. இதுவும் போலிக்காதலே.

 

அடையாளம் தெரியாத மனிதர்கள் அனைவரையும் மிருகங்களாகக் கருதி, பொது வெளியில் கொஞ்சி மகிழ்வது, காமம்.

யாருக்கும் தெரியாமல் கரும்புத் தோட்டத்திலும், காட்டுப் பகுதியிலும் ஒதுங்குவது, காதல் அல்ல. இது காமம்.

 

புற நகர்களின் புதர்ப் பகுதிகளில் பாம்புகளோடு பாம்பாய்ப் படுத்தெழுவது, காதல் அல்ல. இது காமம்.

 

பாழடைந்த மண்டபம், கோவில் மற்றும் சாலைகளில் உள்ள பாலங்களின் கீழே, படுத்து விட்டு வருவதும் காமமே.

 

விடுதிக்குப் போய், கணவன் மனைவியாக வாழ்ந்து விட்டு வருவது, காதல் அல்ல. இது காமம்.

 

மொத்தத்தில் திருட்டுத் தனமாகப் பாலுறவு கொள்வது, நிச்சயமாகக் காதல் அல்ல.

 

காமமும் மோகமும் போலிக்காதலும் தான் திருட்டுப் புத்தியுடையவை. குருட்டுத்தனமானவை. காதல் அச்சமற்றது. நேர்மையானது. காதலித்தல் பிறப்புரிமை. அதே நேரத்தில், பெற்றோரின் அனுமதியைப் பெற வேண்டியது முதற்கடமை எனும் பண்புடையதே காதல்.

 

இருபாலருக்கிடையே எதையாவது எதிர்பார்த்து உருவாகும் நெருக்கம் காதல் அல்ல. அது வியாபாரம்.

 

நான்கு கிலோ அன்பை நான் பொழிகிறேன். ஆகவே, நீயும் நான்கு கிலோ அன்பை என் மீது பொழி,  எனக் கோறுவது, காதல் அல்ல. ஒப்பந்தம் போடுவது போலிக்காதல்.

 

திருமணம் செய்வதாய் வாக்களித்து என்னைச் சீரழித்து விட்ட நபரோடு சேர்த்து வையுங்கள் என்று போராடுவதும், போலிக்காதலே.

 

அடுத்தவர்களோடு பேசுவதை அனுமதிக்காதது, காதல் அல்ல. அதே போல் தண்டிக்க முயல்வதும், காதல் அல்ல.

நம்பிக்கை கொள்தல் காதல் அல்ல. உறங்கச் செல்லும் எவரும் காலையில் விழித்தெழுவோம் என்று நம்புவதில்லை. நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது அது. அது போல், நம்பிக்கை, அவநம்பிக்கை ஆகிய இரண்டையும் கடந்து நிற்பது காதல்.

 

அழகுக்கும் காதலுக்கும் தொடர்பில்லை. அறிவுக்கு காதலுக்கும் தொடர்பில்லை. வயதுக்கும் காதலுக்கும் தொடர்பில்லை. வறுமைக்கும் காதலுக்கும் தொடர்பில்லை. மகிழ்ச்சி மட்டுமே காதலோடு தொடர்புடையது. மகிழ்ச்சியான மனதில் மட்டுமே காதல் மலரும்.

 

குற்றங்காணக் காதலுக்குத் தெரியாது. குறை கூறக் காதலுக்குத் தெரியாது. சந்தேகப் படக் காதலுக்குத் தெரியாது. சட்டம் பேசக் காதலுக்குத் தெரியாது. எதிர்த்து நிற்கக் காதலுக்குத் தெரியாது.

 

நிபந்தனை விதிக்கக் காதலுக்குத் தெரியாது. தண்டிக்கக் காதலுக்குத் தெரியாது. அபகரிக்கக் காதலுக்குத் தெரியாது. அடித்து விரட்டக் காதலுக்குத் தெரியாது. எதையும் பிடுங்கக் காதலுக்குத் தெரியாது. உடலுறவு கொள்ளக் காதலுக்குத் தெரியாது.

 

சுயநலமற்றது காதல்.

 

கொடுக்க மட்டுமே காதலுக்குத் தெரியும். தன்னால் கொடுக்க முடியவில்லையே எனக் கதறுவதே காதல்.

 

நிபந்தனையின்றிச் சரண் அடைவதே, காதல். முழுச் சுதந்திரத்தை வழங்குவதே, காதல்.

 

உடற்சுகத்திற்கு முதலிடம் கொடுப்பது, காதல் அல்ல. பெற்றோருக்குத் தெரியாமல் ஓடிப்போவது, காதல் அல்ல.

உறவுகள் அனைத்தையும் துச்சமாய்த் தூக்கியெறிவது, காதல் அல்ல. மனதிற்கு வலி தரும் காரியம் எதுவுமே காதல் அல்ல.

 

அது காதல் நோய். அதன் பெயரே மோகம்.

 

ஒருவர் கண்ணை மற்றவர் பார்ப்பதால் உருவாகும் அன்பின் பெயர் மோகம். இருவர் கண்களும் ஒன்றையே பார்க்கும் போது உருவாகும் அன்பே காதல்.

 

காதல் உள்ள இடத்தில் தர்க்கம் இருக்காது. தர்க்கமுள்ள இடத்தில் காதல் இருக்காது. இரண்டும் பரம விரோதிகள்.

 

எங்கே சந்தேகம் இருக்கிறதோ அங்கே காதல் இல்லை. எங்கே உடைமை மனப்பான்மை இருக்கிறதோ அங்கே காதல் இல்லை. எங்கே அச்சம் இருக்கிறதோ அங்கே காதல் இல்லை.

 

எங்கே சுதந்திரம் பறிக்கப் படுகிறதோ அங்கே காதல் இல்லை. எங்கே ஈகோ இருக்கிறதோ அங்கே காதல் இல்லை.

 

ஈகோவின் மரணமே காதல். தன்முனைப்பற்றதே காதல். கபடமற்ற அன்பே காதல். கருணையே காதல்.

 

மேற்கண்ட கருத்துக்கள் தான் எது காதல்? எது போலிக்காதல்? எது மோகம்? எது காமம்? எது இனக்கவர்ச்சி? என வரையறை செய்வதற்கான ஆத்தி சூடியாகும்.

 

ஆகவே, பலமுறை வாசித்து, காதலைப் பற்றித் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். குழந்தையிடம் எடுத்துச் சொல்லும் அளவிற்குப் புரிந்து கொள்ளுங்கள்.

 

காதலின் முதற் புள்ளியை வைப்பது பெண். அந்தப் புள்ளியிலிருந்து கோலத்தை வரைவதற்கான இணையைத் தேர்வு செய்வதும் பெண்.

 

எத்தகைய கோலமாக்க வேண்டும் என, அவனுக்கு உத்தரவிடுவதும் பெண். தன் விருப்பத்திற்கேற்ற கோலத்தை அவன் வரைகிறானா எனக் கண்காணிப்பதும் பெண்.

இவ்வாறாகக் கோலத்தின் ஒவ்வொரு வளைவிலும் ஆணை இயக்குவதும், தன் இயக்கத்திற்கு ஏற்ப கோலமிடத் தவறும் ஆணைத் தன் வாழ்விலிருந்து ஒதுக்கித் தள்ளுவதும் பெண். மேலும், அந்தக் கோலத்தால் தன் வாழ்க்கையை அலங்கோலப் படுத்திக் கொள்வதும் பெண்.

 

மனித குலத்தை தலைக்கச் செய்ய, இயற்கை வகுத்துள்ள அழகான திட்டத்தின் படி, ஆணின் காதலில் வீழ்த்தப் படுகிறார்கள்.

 

ஆனால், இயற்கை நடத்தும் இந்த மாயாஜாலம் பற்றிப் பெரும்பாலான ஆண்களுக்கு, அறவே தெரியாது.

 

தங்கள் காதலியைத் தாங்கள் தான் விழிப்புணர்வோடு தேர்வு செய்வதாய் ஆண்கள் நம்புகிறார்கள். அதனால், தங்கள் காதலைத் தாங்கள் தான் துவக்கியதாகவும், அவர்கள் நம்புகிறார்கள்.

 

55% உடல்மொழியாகவும், 38% குரல்தொனி வாயிலாகவும் ஆணோடு உரையாடி, பெண் தன் காதலை முன்மொழிகிறாள். என்கிற தகவல் பெரும்பாலான ஆண்களுக்குத் தெரியவே தெரியாது.

 

“கண்ணோடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல”

காதலின் முதல் பாணம் பார்வை. அப்பார்வையை வீசும் வில் கண்கள். காதல் உரையாடுவதில், சொற்களை விடக் கண்களே சக்தி மிக்கவை. கண்களால் உரைத்த காதலை, சொற்களால் உரைக்கத் தேவையில்லை.

 

இவ்வாறாகப் பெண்ணின் கண்களால் முன் மொழிக்கப்பட்ட காதலை, வழிமொழிவதைதே ஆண் செய்கிறான் என்பது 90 சதவீத ஆண்களுக்கு தெரியாது.

 

காதலைத் துவக்குவதும் பெண். துவக்கிய காதலால், பாதிக்கப்படுவதும் பெண். ஆகவே, காதல் குறித்து விழிப்போடு வாழ வேண்டிய நிலையில் இருப்பதும் பெண், என்பதே பேருண்மையாகும்.

 

ஆனால், பதின் பருவப் பெண் குழந்தையிடம் காதலைப் பற்றி விளக்கமாய் எடுத்துக் கூறி விழிப்போடு வளர்க்கத் தந்தையால் முடியாது. பெண்களுக்கே உரிய, பிரத்தியேகமான, உயிரியல் சார்ந்த பல தகவல்களைப் பற்றிப் பெரும்பாலான ஆண்களுக்குக் கடுகளவு கூடத் தெரியாது. தெரிந்தவர்களும் அதைப் பற்றிப் பெண் குழந்தையிடம் எடுத்துக்கூறி, விழிப்புணர்வூட்ட முடியாது.

 

தாய்க்கு மட்டுமே உள்ள தனியுரிமை, தனியுடமை அது.

 

ஆகவே, காதல், போலிக்காதல், மோகம், காமம், இனக்கவர்ச்சி ஆகியவற்றுக்கு இடையில் உள்ள வேறுபாடுகள் எவையெனத் தந்தையை விடத் தாய் தான் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

 

அந்த வேறுபாடுகள் புரிந்தால் தான், நூலில் மையக் கரு தெளிவாகப் புரிபடும். மையக் கருவைத் தாய் புரிந்து கொண்டால் மட்டுமே, பெண் குழந்தைகளுக்கு அதை எளிதாகப் புகட்டி விட முடியும்.

 

நூலின் மையக்கரு பெண் குழந்தைகளைச் சென்றடைந்தால் மட்டுமே இலங்கையில் குடும்ப அமைப்பு நிலைத்திருக்க முடியும்.

 

குடும்பம் என்பது ஒரு வட்டம். அந்த வட்டத்தின் பரிதி கணவன். ஆரம் குழந்தைகள். மையம் மனைவி. ஆகவே, வட்டமும், பருதியும் உருவாக மையமே ஆதாரம்.

 

ஆம். உருவாக்கங்கள் அனைத்துக்கும் பெண்ணே மூலம். பெண்ணை குடும்ப அமைப்பைத் தாங்கிப் பிடித்துள்ள ஆணி வேர்.

 

பெண்களால் மட்டுமே குடும்ப அமைப்பைக் காக்கவும் முடியும். அழிக்கவும் முடியும்.

 

ஆகவே, இந்த நூலின் கருத்துக்கள் பெண் குழந்தைகளைச் சென்றடைந்தாக வேண்டும்.

 

அதனால், மீண்டுமொருமுறை, தாய்மார்கள் வாசிக்கவும்.

 

இந்த அத்தியாயம் 2k Kids காதல் அறிவியல் நூலில் இருந்து. பெண் பிள்ளைகளை பெற்ற தாய்மார்கள் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டிய தகவல்களின் களஞ்சியம் இந்த நூல்.

 

 

Share with your friends and family

Related Articles

Selfishness

கேளுங்கள். பெறுவீர்கள்! தேடுங்கள். கண்டடைவீர்கள்! எண்ணம் போல் வாழ்க்கை! தீதும் நன்றும் பிறர் தர வாரா! இவையெல்லாம் பிரபஞ்சப் பேருண்மைகள். ஆனால், பலர் வாழ்விலே

Read More

The secret to quenching a woman’s lust.

சொல்லாமல் தெரியாது மன்மதக்கலை சிற்பக்கலை, ஓவியக்கலை, கட்டிடக்கலை இதுபோல் எண்ணற்ற கலைகள் உள்ளன. அதாவது எந்த ஒரு கலையும் கற்க்காமல் விற்பன்னர் ஆக முடியுமா?

Read More

Dangerous English Medicines

மேகற்கத்திய வல்லரசு நாடுகளில் தோன்றிய ‘Allopathy’ என்னும் ஆங்கில வைத்தியம் அசுர வளர்ச்சி பெற்று… உலக நாடுகளின் சகல பாரம்பரிய வைத்தியங்களையும் தூக்கி வீசிவிட்டு

Read More

The World Reflects You

மனம் என்பது இயக்குனர். மனதின் கட்டளைப் படி இயங்கும் இயந்திரம் மூளை. இயந்திரத்தை நம்மால் பார்க்க முடியும். ஆனால் இயக்குனரைப் பார்க்க முடியாது என்று

Read More

You Are Unique

பூமியில் வாழும் எண்ணூறு கோடி மக்களில் நீங்கள் தனித்துவமானவர்.   இது வரை வாழ்ந்து சென்ற மற்றும் வருங் காலத்தில் வாழப் போகின்ற பல்லாயிரம்

Read More

The secret to disease-free living

அதிகாலையில் எழுபவன்,   இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன்,   முளைகட்டிய தானியங்களை உணவில்  பயன்படுத்துகிறவன்,   மண்பானைச் சமையலை உண்பவன்,   உணவை

Read More

MR. SAJAN

{ Author }

Web Developer & Designer

 நிரூபிக்க முடிந்த விடைகளை மட்டும் உங்களோடு நான் பகிர்ந்து கொள்கிறேன்.

Sponsor