Description
நன்மைகள்
ஒவ்வொருவருக்கும் ஒரு மொழி இருக்கிறது. நம் தேவைகளை வெளிப்படுத்த, நாம் உணர்ந்ததைப் பகிர்ந்து கொள்ள… என்று, பிறரோடு நமக்குள்ள தொடர்பை மொழியின் மூலமே நாம் ஏற்படுத்திக் கொள்கிறோம்.
மனிதர்களின் அத்தியாவசியமான தொடர்பு சாதனமாக மொழி விளங்குகிறது.
தன் தாய் மொழியையும் கடந்து – பக்கத்து மாநில மொழிகள், தேசிய மொழி, உலக மொழி… என நம் தேவைகள் பெருகிக் கொண்டே போகின்றன.
மனித மொழிகளைத் தாண்டி, நாம் வளர்க்கிற செல்லப் பிராணிகளின் மொழிகளையும் அவற்றின் நடவடிக்கைகள் மூலம் அறிந்து கொள்கிறோம். ஒரு நாயினுடைய குரைப்பை வைத்துக் கொண்டே, அதன் பல தேவைகளை நாம் கற்றுக் கொள்கிறோம். இன்னும், ஆடு, மாடு, கோழி, பூனை, கிளி… எனத் தொடரும் நம் வீட்டுப் பிராணிகளின் மொழிகளை அவற்றின் செய்கைகள் மூலம் நம்மால் அறிய முடிகிறது.
ஒரு விவசாயி, பறவைகளின் குரலையும் – மண்வாசனையையும் கண்டு மழையின் வருகையை தன் நுண்உணர்வால் அறிந்து கொள்கிறார். கேரளத்தில் -கனிக்கொன்ன மரத்தின் வசந்தத்தை வைத்து – அவ்வருடத்தின் மழை அளவை கணிக்கிறார்கள் மக்கள்.
இப்படி, தன் புறத்தேவைகளுக்காக புதியவற்றை கற்றுக் கொண்டேயிருக்கிறான் மனிதன். இன்னும், இயற்கையின் ஒவ்வொரு படைப்பிற்கும் ஒரு மொழி இருக்கிறது. அதன் இயல்போடு ஒன்றி வாழும் மனிதர்கள் அவற்றை அறிந்து கொள்கிறார்கள்.
உங்களுக்கு ஏற்படப் போகும் ஒரு பெரிய நோயை, சில வருடங்களுக்கு முன்பே ஒருவர் உங்களிடம் சொன்னால் என்ன செய்வீர்கள்?
நீங்கள் சாப்பிடுகிற உணவு – உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கை ஏற்படுத்தும் என்பதை சாப்பிடும் போதே அவர் கூறினால் என்ன செய்வீர்கள்?
நீங்கள் செய்து கொண்டிருக்கும் செயல் உங்கள் உடல் நலத்திற்கு கேடானது என்று முன்கூட்டியே அவர் எச்சரித்தால் எப்படி இருக்கும்?
இப்படி, சதா சர்வகாலமும் உங்கள் நலனில் அக்கறை கொண்டு, வரப்போகிற உடல்ரீதியான ஆபத்துக்களை முன்பே அறிவித்து எச்சரிக்கை செய்யும் ஒரு நபர் உங்களுடன் இருந்தால் அவருடைய பேச்சை நாம் கேட்போமா? மறுப்போமா?
அப்படி ஒருவர் நம் ஒவ்வொருவரோடும் இருக்கிறார். அவர்தான் – உடல். அவர் கூறுவதை நாம் புரிந்து கொள்வதுதான் உடலின் மொழி!
Reviews
There are no reviews yet.